பொருத்து வீட்டுக்குப் பதிலாக வடக்குக் கிழக்கு மக்களுக்கு ‘போறணை’ உகந்தது!

364 0

606923111namal1வடக்குக் கிழக்கு மக்களுக்கு இரும்பினாலான பொருத்து வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்குப் பதிலாக, அங்கே நிலவும் உஷ்ணமான காலநிலைக்கு ‘போறணை’ அமைத்துக்கொடுப்பது சிறந்தது என முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நடைமுறைக்குச் சாத்தியமற்ற செயல்களைச் செய்துவரும் நல்லாட்சி அரசாங்கம், பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன்படி சொந்தக் காணிகளையும் வீடுகளையும் வழங்கத் தவறியிருப்பதாகக் குற்றம் சுமத்தினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் வீடமைப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நமல் ராஜபக்ஷ நல்லாட்சி அரசாங்கம்மீது கடுமையாகச் சாடியிருந்தார். அத்துடன் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், வடக்குக் கிழக்குப் பற்றிப் பேசுகின்றீர்கள். அங்கே 55ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவிக்கிறீர்கள்.

ஒரு பில்லியன் டொலரை கடனாகப் பெற்று வடக்குக் கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதை கண்டேன். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை விற்பனை செய்வதன்மூலம் அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கிடைக்கின்றது. அதற்குச் சமனான கடனையே வடக்குக் கிழக்கில் அரசாங்கம் இரும்பினாலான பொருத்து வீட்டை அமைப்பதற்கு வாங்குகின்றது.

வடக்கிற்கு நீங்கள் சென்றிருந்தால் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் அங்கு நிலவும் காலநிலை தொடர்பாக விசாரித்திருந்தால், அவர்களுக்கு இரும்புப் பொருத்து வீட்டினை அமைத்துக்கொடுப்பதற்குப் பதிலாக போறணையொன்றை அமைத்துக் கொடுப்பதே சிறந்ததாகும். நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயங்களையே இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.