தமிழரின் கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தால் மஹிந்த இப்போதும் ஜனாதிபதியே–வடக்கு முதல்வர்

340 0

download-1தம்மால் முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தால், மஹிந்த ராஜபக்ஸ இன்றும் ஜனாதிபதியாக பதவி வகித்திருப்பார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சிங்கள ஊடகமொன்றில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்;.

2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் தான் சத்தியபிரமாணம் செய்துக் கொண்டதாகவும், அதற்கு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து, அவரிடம் 10 கோரிக்கைகளை முன்வைத்திருந்ததாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.

அந்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்திருந்த போதிலும், அந்த ஒரு கோரிக்கையை கூட அவர் நிறைவேற்றவில்லை என வட மாகாண முதலமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு அவர் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கும் பட்சத்தில், இன்றும் அவர் ஜனாதிபதியாக பதவி வகித்திருப்பார் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாமையினாலேயே, தாம் சர்வதேச தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தில் மாற்றங்கள் காணப்படுகின்ற போதிலும், இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பௌத்தர்கள் வாழாத பகுதிகளில் புத்தர் சிலைகளோ அல்லது பௌத்த விஹாரைகளோ நிர்மாணிக்கின்றமை தேவையற்ற விடயம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இவ்வாறான விஹாரைகள் ஸ்தாபிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வட மாகாணத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதாக கூறப்படும் விடயத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் மாகாணத்திலுள்ள ஆளுநர், மாவட்ட செயலாளர், மத்திய அரசாங்கம் என அனைவருக்கும் அதிகாரங்கள் காணப்படுகின்றமையினால், தன்னிச்சையாக தீர்மானங்களை எடுத்து மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தம்மால் முடிந்த அனைத்து செயற்திட்டங்களையும் தாம் உரிய வகையில் முன்னெடுத்து வருவதாக வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.