போரினால் உயிரிழந்தவர்களை விடவும் சாலை விபத்துக்களால் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் குறித்த ஊடக சந்திப்பில் தற்போது அரசாங்கம் போக்குவரத்து தவறுகளுக்கு அதிகரித்துள்ள தண்டப்பணமாக அறவிடும் தொகை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
‘இந்த தண்டப்பணம் அறவிடப்படுவது தவறு செய்பவர்களிடம் இருந்து. நீங்கள் சொல்கின்றீர்களா தவறு செய்பவர்களை ஊக்குவிக்க சொல்லி? தவறு செய்பவர்கள்தான் குறித்த தண்டப்பணம் தொடர்பாக கவலை கொள்ள வேண்டும். இன்று பேருந்துகளில் ஒழுக்கம் என்பது பேணப்படுகின்றது. நானும் ஒரு காலத்தில் போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றி உள்ளேன். சாரதிகளுக்கு ஒழுக்கத்தை ஏற்படுத்த இவ்வாறான ஒரு தொகை அறவிடப்படுவதில் தவறு இல்லை. சாரதிகள் கவனயீனத்தினால் இன்று எத்தனை பேர் பலியாகியுள்ளனர்? நீதிக்கு புறம்பாக நடப்பதனால்தான் இவை சம்பவிக்கின்றன. ஆகவே சாலை விபத்துகளை தடுப்பதற்கு ஒரு சட்டமும் ஒழுங்கும் அவசியம்.
ஆனாலும் தவறு செய்யும் பொலீஸ் அதிகாரிகள் தொடர்பாக கவனம் செலுத்த கமரா முறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும். காரணம் வருடத்திற்கு மூவாயிரம் பேருக்கு சாலை விபத்துக்களால் மரணம் ஏற்படுகின்றது’
அத்துடன் அரச ஊழியர்களின் பதவியுயர்வுக்கு புதிய முறைமையொன்றை அறிமுகம் செய்யவுள்ளோம்.
இதுவரை காலமும் சேவைக் காலத்தை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வுகள், எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படவுள்ளது.
அரச சேவையை நவீனமயப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.