சிறிலங்கா அரசாங்கம் தமது அரசியல் எதிரிகளை பலிகொடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளமையை அதன் செயற்பாடுகள் புலப்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கம் தனது அமைச்சரவையின் சுருக்கத்தின் மூலம் தனது நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது, புதிய நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்பே அரசாங்கம் 19 ஆவது திருத்தத்தை மீறியதாகத் தெரிகிறது.
இந்த குறிப்பிட்ட சட்டம் தொடர்பாக அரசாங்கம் என்ன செய்ய விரும்புகிறது என்பதற்கான அறிகுறியை இது தருகிறது.
மேலும் அலி சப்ரியை நீதி அமைச்சராக நியமிப்பது அரசாங்கம் நீதித்துறையை எவ்வாறு கையாளப்போகிறது என்பதற்கான மற்றுமொரு அறிகுறியாகும்.
புதிய அமைச்சரவையில் உள்ளவர்களில் பெரும்பாலோனோருக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் உள்ளன.
அதாவது, அரசியல் எதிரிகளை பலிகொடுக்கும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டிருக்கக்கூடும், இதனால்தான் சப்ரிக்கு நீதித்துறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாமல் ராஜபக்ஷவை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சராக நியமித்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன். இளமையாகவும் ஆற்றலுடனும் இருப்பதால் அவருக்கு வழங்கப்பட்ட இலாகா குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு மாகாணத்திற்கும் நாங்கள் ஒரு விளையாட்டு வளாகத்தை உருவாக்கத் தொடங்கிய திட்டத்தை அவர் செயற்படுத்துவார் என்று நம்புகிறோம்.
அதாவது அமைச்சரவையை ஒன்றை அமைப்பதற்காகவே மக்கள் வாக்களித்தனர். ஆனால் தற்போது அமைச்சரவைக்கு பித்தளை, மண், மிளகாய், அரிசி, தேங்காய்,எண்ணெய் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களே வருகை தந்துள்ளனர்.
இந்த மாதிரியான அமைச்சரவை இந்த உலகத்திலேயே இல்லை. இலங்கையில்தான் முதல் முறையாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய பொறுப்புகள் அனைத்தும் அவர்களது உறவுகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, நிதி மஹிந்த ராஜபக்ஷவால் கட்டுப்படுத்தப்படுகிறது, பாதுகாப்பு கோட்டாபாய ராஜபக்ஷவால் கட்டுப்படுத்தப்படுகிறது, இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கள் நாமல் ராஜபக்ஷவால் கட்டுப்படுத்தப்படுகின்றது, பணம் பசில் ராஜபக்ஷவினால் செலவிடப்படுகிறது, மற்றும் தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கு சமல் ராஜபக்ஷக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பணத்துக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் ஒருவருக்கு துறைமுக அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது. இது நகைச்சுவையான விடயம் என்பதை அனுதாபத்துடன் நினைவூட்டுகிறேன்.
அத்துடன் மக்கள் வழங்கிய ஆணை காரணமாக நாங்கள் அமைதியாக இருக்கிறோம். இன்னும் ஒரு மாதத்தில் நல்ல விளையாட்டுகளைப் பற்றி பேசுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.