அபிவிருத்தி பணிகளை தடை இன்றி தயக்கம் இன்றி முன்னெடுப்பேன். யாரும் அச்சப்பட தேவையில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று(வெள்ளிக்கிழமை) காலை சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , “தற்போதைய புதிய அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள அமைச்சு பொறுப்புகளை கண்காணிப்பதற்காக அமைச்சரவை அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு நாட்டின் பிரதமரின் நேரடி பார்வையில் காணப்படுகின்றது.
ஆகையால் யார் குற்றம் சொன்னாலும் அச்சப்பட தேவையில்லை. எனது அமைச்சின் கடமைகளை எவ்வாறு முன்னெடுக்கின்றேன் என்பதை பொருத்திருந்து பாருங்கள்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் அதன் அணுகுமுறைகளை வெவ்வேறாக முன்னெடுத்து செல்கின்றது.
அந்தவகையில் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பளம் விடயம் தொழிற்சங்க ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதேநேரத்தில் இது தொடர்பாக நாட்டின் பிரதமருடைய கவனத்திற்கும் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாய் தொடர்பான பேச்சுவார்த்தை சற்று வித்தியாசமாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும். பெருந்தோட்டப்பகுதிகளில் அமைக்கப்படும் வீடமைப்பு ஆரம்ப காலத்தில் சொன்னதை போல் எழுத்தளவில் மாடி வீடாக இருந்தாலும், (சிலப்) முறையிலான வீடுகளே அமைக்கப்படும்.
ஆனால் இந்திய வீடமைப்பை வைத்துக் கொண்டு நாம் அரசியல் செய்யப்போவதில்லை. வீடமைப்பு தொடர்பில் முன்னெடுக்கும் பணிகளை நீங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியுடன் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பல்கலைகழகம் அமையப்பெறவுள்ளது. இன்று கல்வி அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் பதவியேற்றுள்ளார்.
அவரிடம் கலந்தாலோசித்துள்ளோம். ஆகையால் இன்னும் ஓரிரு வாரங்களில் பல்கலைகழகம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை உள்ளது.
வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட மாணவர்களை உள்ளடக்கியே இவ் தேசிய பல்கலைகழகம் அமையப்படும். அங்குள்ள இளைஞர்களையும் நாம் கவனிக்க கடமைப்பட்டுள்ளோம்.” என குறிப்பிட்டார்.