முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்த அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்

280 0

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிஸ், தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்து பேசினார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்த கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் (வயது 55) போட்டியிடுகிறார். இதை நேற்று முன்தினம் ஜோ பிடன் அறிவித்தார். கமலா ஹாரிசின் தந்தை ஜமைக்காவை சேர்ந்த டொனால்டு ஹாரிஸ் ஆவார். தாய், சென்னையை சேர்ந்த சியாமளா கோபாலன்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக ஜோ பிடனுடன் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் பிரசார நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரையில் தனது தாய் சியாமளா கோபாலனை நினைவு கூர்ந்து பேசினார். அவர் கூறியதாவது:-

உலகின் எதிரெதிர் பகுதிகளை சேர்ந்த என் தந்தையும், தாயும் உலகத்தரமான கல்வியைத் தேடி அமெரிக்கா வந்தது உங்களுக்கு தெரியும். 1960-களில் நடந்த சிவில் உரிமை போராட்ட இயக்கமே அவர்களை ஒன்றிணைத்தது. குறிப்பாக மாணவ பருவத்திலேயே ஓக்லாந்து தெருக்களில் பேரணி, நீதிக்கான ஆர்ப்பாட்டம் என அவர்கள் போராடினர்.

பிற்காலத்தில் அந்த போராட்டங்களில் நானும் பங்கேற்று இருக்கிறேன். அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு என்னையும் பெற்றோர் அழைத்து வருவார்கள். என்னை பெட்டியில் இறுக்கமாக கட்டி இழுத்து வருவார்கள். அந்த போராட்டங்கள் இன்றும் தொடர்கிறது.

என் வாழ்க்கையில் என் அம்மா சியாமளாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர் என்னையும், சகோதரி மாயாவையும் எப்படி வளர்த்தாரென்றால், நாங்களும், ஒவ்வொரு அமெரிக்க தலைமுறையும் பேரணியை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் வளர்த்திருக்கிறார்.

‘பிரச்சினை வரும்போது உட்கார்ந்து அதைப்பற்றி குற்றம் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது, மாறாக அதில் இருந்து மீண்டு வர ஏதாவது செய்ய வேண்டும்’ என்றே எனது அம்மா அடிக்கடி கூறுவார். ஆகவே நான் கொஞ்சம் செய்திருக்கிறேன். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு செதுக்கிய சொற்களை உண்மையானதாக மாற்ற, சட்டத்தின் கீழ் சம நீதி கிடைக்க என் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறேன்.

மாவட்ட வக்கீலாக நான் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மக்களில், உதவிக்காக தேவைப்பட்டவர்களுக்காக போராடி வருகிறேன். கலிபோர்னியா அட்டார்னி ஜெனரலாக நான் பணியாற்றியபோது, ஆயுதங்கள், மனிதர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பன்னாட்டு குற்றவியல் அமைப்புகளில் நிறுத்தினேன்.

இவ்வாறு கமலா ஹாரிஸ் கூறினார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டதை அமெரிக்கவாழ் இந்திய முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் வரவேற்று உள்ளனர். ஒட்டுமொத்த இனத்துக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி என அவர்கள் கூறியுள்ளனர்.

கறுப்பினத்தவர், பெண்கள் மற்றும் அனைத்து குடியேறிகளுக்கும் இது ஒரு மகிழ்ச்சியான விஷயம் என அமெரிக்க தேசிய சீக்கிய பிரசாரம் அமைப்பின் மூத்த ஆலோசகர் ராஜ்வந்த் சிங் கூறினார்.

இதற்கிடையே கமலா ஹாரிசை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில், ஜோ பிடனுக்கு 26 மில்லியன் டாலர் (சுமார் ரூ.182 கோடி) தேர்தல் நன்கொடை கிடைத்து உள்ளது. இது முந்தைய நாளை விட இரு மடங்காக அதிகம் ஆகும்.

இது உண்மையிலேயே உற்சாகம் அளிக்கும் விஷயம் என ஜோ பிடன் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.