சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவின் வீரியம் குறைந்தது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை ராயபுரம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12 சதவீதம் பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து மே மாதம் கொரோனா பரவல் அதிகரித்து 23 சதவீதம் பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். பின்னர் ஜூன் மாதத்தில் 27 சதவீதம் பேரும், அதன்பிறகு ஜூலை மாதத்தில் 12 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி வரையில் 7 சதவீதம் பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஜூன் மாதத்தில் 3 ஆயிரத்து 650 பேரும், ஜூலையில் 2 ஆயிரத்து 20 பேரும் கொரோனா சிகிச்சையில் இருந்த நிலையில், ஆகஸ்டு மாதத்தில் 515 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை நன்றாக கைகொடுத்துள்ளது. மேலும் மக்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்ததும் ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவின் வீரியம் குறைந்ததுக்கான காரணமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.