பாராளுமன்றம் சென்றுள்ள அனைத்து உறுப்பினர்களினதும் முக்கிய கடமையாக இருக்கக் கூடியது தமிழ் மக்களின்இருப்பை பாதுகாக்க வேண்டும். வடக்கு, கிழக்கு நிலத்தொடர்ச்சி பாதுகாக்கப்பட வேண்டும். இதனைப் பாதுகாப்பதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.
இப்படி அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளி தலைவரான சுரேஷ் பிறேமச்சந்திரன். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான க. வி.விக்னேஸ்வரன் நேற்று முள்ளிவாய்க் காலில் உறுதியேற்றுக் கொண்டார். இதன்போது, சக கூட்டணித் தலைவர்களான சுரேஷ் பிறேமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், மற்றும் கூட்டணியின் வேட்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அங்கு கருத்து வெளியிட்ட சுரேஷ் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
;அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை எந்தவிதமான பிரியோசனமும் இல்லாத வகையிலும் ஒரு குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தக் கூடிய வகையிலுமே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கின்றது. குறிப்பாக முல்லைத்தீவு மண் எமது கையை விட்டு செல்லக் கூடிய நிலையிலேயேஉள்ளது. பாராளுமன்றம் சென்றுள்ள அனைத்து உறுப்பினர்களினதும் முக்கிய கடமையாக இருக்கக் கூடியது தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க வேண்டும். வடக்கு, கிழக்கு நிலத் தொடர்ச்சி பாதுகாக்கப்பட வேண்டும்.
இதனைப் பாதுகாப்பதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். ஏனென்றால் இப்போது ஆட்சி அமைத்திருக்கின்ற அரசாங்கம் என்பது முழுமையாக சிங்கள ; பௌத்த மேலாதிக்கத்தை நிறுவக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைந்த பட்சம் இவ்வாறான கொள்கை ரீதியிலாவது இணைந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் தொடர்ந்தும் தனி வழி செல்வோம், தனித்து செயற்படுவோம் என்பது பேச்சளவில் சரியாக இருந்தாலும்கூட செயற்பாட்டளவில் ஒட்டு மொத்த தமிழ் பாராளுமன்றஉறுப்பினர்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்த யாராக இருந்தாலும் சரி வட, கிழக்கின் மண்ணும் இருப்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மிக மிக முக்கியமான விடயமாகும் என்றார்.