மட்டக்களப்பு ஏறாவூர்- புன்னக்குடா கடலில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று காலைவரை கரையொதுங்கவில்லையென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் உயர்தர வகுப்பைச் சேர்ந்த பத்து மாணவர்கள் துவிச்சக்கரவண்டியில் புன்னக்குடா கடற்கரைக்குச் சென்றுள்ளனர். இவர்களில் சிலர் குளித்துக்கொண்டிருந்தபோது பாரிய அலையொன்றில் மூவர் அள்ளுண்டு போனதாகவும், அதில் ஒருவர் சற்றுநேரத்தில் மயக்கமடைந்தநிலையில் கரையொதுங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய இருவரும் காணாமற்போயிருந்தனர்.
மயக்கமடைந்த நிலையில் கரையொதுங்கிய சேகுதாவூத் அக்ரம் என்ற மாணவன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் முதலுதவியளிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதேவேளை, ஏறாவூர்-மிச்நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய அல்ஹர்தீன் பர்ஹான் மற்றும் செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்ஷன் ஆகியோரே பலியாகியுள்ளனர்.
மாலைநேர பிரத்தியேக வகுப்பிற்குச் செல்தாக வீட்டில்கூறிவிட்டு இம்மாணவர்கள் கடற்கரைக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் கடல் அதிக கொந்தளிப்பாகக் காணப்படும் நிலையிலேயே இம்மாணவர்கள் கடலில் குளிக்கச் சென்று மூழ்கி உயிரிழந்துள்ளனர்.