இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத்துக்கு மேலும் உதவும் அமெரிக்கா

232 0

இலங்கை முழுவதிலும் அனர்த்தம் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் அவசரகால பதிலளிப்பு நடவடிக்கைகள் மற்றும் மட்டுப்படுத்தும் உபாயங்களை உருவாக்குவதில் உள்ளூர் சமூகத் தலைவர்களுக்கு உதவுவதற்காக சர்வோதய ஷ்ரமதான இயகத்துக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக அமெரிக்க அரசு வழங்கியது. இந்த புதிய நிதியளிப்பானது சமூக மீளெழுச்சித்திறனை வலுப்படுத்தும் என்பதுடன், இரு வருடங்களில் உள்ளூர் பங்குதாரர்களுக்கும் சர்வதேச நிவாரண முகவரமைப்புகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தும்.

´அமெரிக்க அரசாங்கமும் மற்றும் அமெரிக்க மக்களும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைக்கு அனர்த்த முகாமைத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர். அந்த முன்னெடுப்புகள் உயிர்களை காப்பாற்றியுள்ளதுடன், துயரங்களையும் தணித்துள்ளன. அத்துடன், அனர்த்தங்களின் சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களையும் அவை குறைத்துள்ளன. எதிர்வரும் வருடங்களிலும் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ திறன்களை பலப்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் உறுதிப்பாட்டுடன் இருக்கிறது என்பதை கூறுவதில் நான் பெருமைப்படுகிறேன்,´ என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

சர்வோதய ஷ்ரமதான இயக்கத்திற்கு வழங்கப்படும் இந்த கடனற்ற நிதியுதவின் கீழ் குறிப்பிட்ட நடவடிக்கைகள் சமூகம் தலைமையிலான அனர்த்த தணிப்பு செயற்பாடுகள், அனர்த்த முகாமைத்துவ பயிற்சி, மற்றும் அனர்த்த அபாயங்கள் குறித்த பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும்.

இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ ஆற்றலை பலப்படுத்துவதற்கு ஐ.நா. உலக உணவுத் திட்டத்திற்கும் 550,000 அமெரிக்க டொலர்களை அமெரிக்க அரசாங்கம் அண்மையில் வழங்கியது.

எதிர்பாரா நிகழ்வுகள் குறித்த தேசிய மட்டத்திலான திட்டங்களை உருவாக்குதல், அனர்த்த பதிலளிப்பு ஒத்திகைகளை வழிநடத்தல், மற்றும் தொடர்பாடல்கள், ஒருங்கிணைப்பு, மற்றும் தகவல் முகாமைத்துவத்தை மேம்படுத்தல் தொடர்பில் அரச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளுக்கு இந்த நிதியளிப்பு உதவிபுரியும்.

இலங்கையில் பருவமழை மற்றும் இடைக்கால பருவமழை காலங்களுக்கு முன்னதாக அவசரகால பதிலளிப்பு நடவடிக்கைகளை செயற்படுத்த சர்வோதய ஷ்ரமதான இயக்கத்துக்கு 160 பிளாஸ்டிக் விரிப்பு சுருள்கள் மற்றும் 2,400 நீர் கொள்கலன்களையும் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க அரசாங்கம் வழங்கியது.

மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தயாராவதற்கும் பதிலளித்து செயற்படவும் மற்றும் அவற்றிலிருந்து மீட்சிபெறவும் மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் USAID ஊடாக அமெரிக்க அரசாங்கம் உதவி வருகிறது. கடந்த 5 வருட காலப்பகுதியில் மட்டும் அது 7 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் விட அதிகம் முதலீடு செய்துள்ளது.