லெபனான் அமோனியம் நைட்ரேட் வெடிவிபத்து எதிரொலி: 3-வதாக நீதித்துறை மந்திரி விலகல்

432 0

லெபனான் பெய்ரூட் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் விடித்து தீப்பற்றிய விவகாரத்தில் 2 மந்திரிகள் ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.

மேற்காசிய நாடான லெபனானின் துறைமுக நகரும், தலைநகருமான பெய்ரூட்டில் கடந்த 4-ந்தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. துறைமுகத்துக்கு அருகில் உள்ள சேமிப்பு குடோனில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பின் விளைவாக அந்த குடோன் அமைந்திருந்த கட்டடம் மற்றும் அதன் அருகில் அமைந்திருந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அருகிலிருந்த கட்டடங்கள், அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் வெடித்து சிதறின. 135-க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்ததாகவும், 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்று கூறப்பட்டுவந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டு துறைமுக கிடங்கில் 6 ஆண்டுகளாக வைத்திருந்த 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் என்ற வெடிமருந்து வெடித்ததே இந்த சம்பவத்திற்கான காரணமாக லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கூறியுள்ளார்.
இந்த விபத்திற்கு எதிராக மக்கள் போராட தொடங்கியுள்ளனர். அவர்கள் அதிபர் மைக்கேல் அவுன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். போராட்டம் தொடங்கிய நிலையில் தகவல் தொடர்பு மந்திரி மனால் அப்தெல் சமாத், சுற்றுச்சூழல் மந்திரி டமியானோஸ் கட்டார் ஆகியோர் தங்களது பதவியில் இருந்து விலகினர். மேலும், 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
நேற்றும் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் நீதித்துறை மந்திரி மரி கிளாட் நஜ்ம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவருடன் இதுவரை மூன்ற மந்திரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.