கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாம்கள், நினைவுத் தூபிகளை அகற்ற வேண்டும்

6375 17

Kilinochchi-Memorial-380-seithyகிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இராணுவமுகாம்கள் மற்றும் இராணுவ நினைவுத் தூபிகளும் அகற்றப்படவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பான முகாமைத்துக் குழுவின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் எஸ்.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், எந்திரிகள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பில் ஆராய்நதனர்.

கிளிநொச்சி நகரத்தின் அபிவிருத்தி இராணுவ வெளியேற்றம் அவசியமானது என்றும் நகரத்தின் முக்கிய இடங்கள் பலவும் இராணுவத்தின் கையில் உள்ளதாகவும் வளம் பொருந்திய, பொருளாதாரம் மிக்க இடங்கள், அழகான பகுதிகள் இராணுவத்திடம் உள்ளதாகவும் நகரத்தின் அபிவிருத்திக்கு இது பாரிய இடைஞ்சலாக காணப்படுகிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கிளிநொச்சி நகரத்தின் டிப்போ சந்தியில் தென்னிலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட பழமையான கற்கள் அடுக்கப்பட்டு கிளிநொச்சி நகரத்தின் அடையாளத்தையும் வரலாற்றையும் திசை திருப்பும் விதமாக அமைத்துள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபியை அகற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். உயர் பாடசாலை ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள குறித்த இராணுவ நினைவுத் தூபி இளைய சந்ததியிடம் பகைமை உணர்வை தூண்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

கலாசார மண்டபம் அமைத்தல், பொதுநூலகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டது. கிளிநொச்சி நகரத்தை நவீன நகரமாகவும், தனித்துவமான நகரமாகவும், அதன் அடையாளங்களை பாதுகாக்கும் வகையிலும் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இராணுவ நினைவுத் தூபி தொடர்பான பிரச்சினை எதிர்காலங்களில் தீரக்கப்படும் சூழ்நிலைகளும் உருவாகலாம் என்று மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

Leave a comment