டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது.
வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர்.
இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
மேலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகௌக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த மோதலின் ஒரு பகுதியாக சீனாவின் பிரபலமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைவிதிக்க அதிபர் டிரம்ப் சிறப்பு உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடை அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதற்காக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுக்கு 45 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டது. செப்டம்பர் 15-க்குள் டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிடவேண்டும் அல்லது தங்கள் நாட்டில் செயலிக்கு தடை விதிக்கப்படும் என டிரம்ப் காலக்கெடு விதித்தார்.
இதையடுத்து, டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது டுவிட்டர் நிறுவனமும் இந்த களத்தில் குதித்துள்ளது. டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்க டுவிட்டர் நிறுவனமும் முயற்சித்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.
டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்க மைக்ரோசாப்ட் மற்றும் டுவிட்டர் நிறுவனங்கள் முயற்சித்து வரும் நிலையில் நிதி அடிப்படையில் அதிக பலம்வாய்ந்த மைக்ரோசாப்டே டிக்டாக்கின் உரிமத்தை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.