அனைவரும் ஏற்றால் தமிழரசுக் கட்சித் தலைமையை ஏற்கத் தயார்: சிறிதரன் கிளிநொச்சியில் அறிவிப்பு

354 0

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை அனைவருமாக இணைந்து வழங்கினால் ஏற்கத்தயார் என யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தாக யாழ். ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

இங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

;தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஏற்பது தொடர்பில் எனக்குத் தனிப்பட்ட ஆசை ஏதும் கிடையாது. இன்னுமொரு தலைமையைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. தமிழரசுக் கட்சியில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அது உடனடியாக ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை. தேர்தல் முடிவுகளை வைத்து தலைமைகளை மாற்ற வேண்டும் எனக் கூறுவது பொருத்தமற்றது.

தமிழரசுக் கட்சியில் இளம் இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எனக்கு தலைமைப் பதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அனைத்து உறுப்பினர்களும்,மக்களும் இணைந்து ஒருமித்துக் கோரினால் அந்தத் தலைமையை ஏற்க நான் தயாராகவே உள்ளேன். அனைவரினதும் சம்மதத்துடனேயே அன்றி, இன்னொருவரது பதவியைப் பறித்து அதில் அமர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்றார் .