இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் மிக மோசமாகத் தோற்றிருக்கின்றார்கள் என்கிறார் சுமந்திரன்

266 0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் மிக மோசமாகத் தோற்றிருக்கின்றார்கள். அதனை நாங்கள் கருத்திலே எடுத்து உரிய நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்குக் காரணம். உடனடியாகக் கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம்” எனவும் அவர் கூறினார்

யாழ்ப்பாணத்திலுள்ள அவருடைய இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

;நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரியபின்னடைவைச் சந்தித்துள்ளது. வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களை வழங்கவேண்டுமென நாங்கள் மக்களிடம் கேட்டோம். இப்போது அதில் அரைவாசி எண்ணிக்கைதான் எங்களுக்குக் கிடைத்துள்ளது.

அதாவது 10 ஆசனங்கள். இது மிக சொற்பம். இது நாங்கள் எதிர்பாராத ஒரு பின்னடைவு.கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எங்களுக்கு இப்படியான பின்னடைவு இருந்த போதிலும், அந்தத் தேர்தல் முறைமை ரீதியாக சூழல் வித்தியாசம் காரணமாக அந்தப் பின்ன டைவிலிருந்து மீண்டெழுவோம் என்ற நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுத்தோம்

இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ள முறை பல கரிசனை களை எழுப்புகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே நம்பிக்கை குறைந்துள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அந்த மக்கள் தீர்ப்பை நாம் பொறுப்புணர்வுடன் ஏற்றுக் கொள்வதுடன், அந்த நம்பிக்கையை மீளக்கட்டியெயழுப்பும் செயற்பாட்டில் உடனடியாக நாங்கள் இறங்குவோம் .