அரசமைப்பு திருத்த நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை

275 0

அரசமைப்பு திருத்த நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

அரசமைப்பை முற்றாக மாற்றுவதையோ அல்லது 19வது திருத்தத்தினை நீக்குவதையோ உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை ஆழ்ந்து ஆராய்ந்து கவனமாக பரிசீலனை செய்த பின்னரே அதனை முன்னெடுப்போம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும் போது மாற்றுநடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயமாக சில திருத்தங்கள் அவசியம்,நாட்டை ஆளும்விடயத்தில் தற்போதுள்ள விடயங்களை தொடர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட பின்னர் 19 வது திருத்தம் அவர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தடையாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளின் மூலம் புதிய ஜனாதிபதியின் பின்னர் மக்கள் புதிய வகையிலான நாடாளுமன்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது, முன்னைய நாடாளுமன்றத்திலிருந்து மாறுபட்ட நாடாளுமன்றத்தை அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது புலனாகியுள்ளது எனவும் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் அரசமைப்பை மாற்றுவதற்கான பலம் அரசாங்கத்துக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாமல் செய்யப்படுமா என்ற கேள்விக்கு அவ்வாறு செய்வதற்கான அவசியம் எதுவுமில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு பேரவையின் நியமனம் மூலம் அரசியல்செல்வாக்கற்ற ஆணைக்குழுக்களை பேணுவதே சுயாதீன குழுக்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த இலக்குகள் எட்டப்படவில்லை என்பதை அனைவரும் பார்க்ககூடியதாகவுள்ளது அந்த இலக்கினை அடைவதற்கு சில சீர்திருத்தங்கள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.