சிறிலங்காவில் புதிய நாடாளுமன்றில் முதல் அதிரடி-19ஆவது திருத்தம் இரத்து!!

329 0

 சிறிலங்காவில் 19ஆவது திருத்தம் மற்றும் அதனால் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை இரத்து செய்வது தொடர்பாக  கோட்டாபய ராஜபக்சவும், புதிய அமைச்சரவையும் இணைந்து முடிவெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

19ஆவது திருத்தம் நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு முதலிடத்தைப் பிடித்த அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குப் பட்டியலில் பொதுஜன முன்னணி சார்பில் அட்மிரல் சரத் வீரசேகர முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதனையடுத்து நேற்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை தனது இல்லத்தில் நடத்திய அவர், 19ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட வேண்டும் என்று மறைமுகமாகக் கூறினார்.

‘சுயாதீனத்துனம் கொண்டதாகக் கூறப்படும் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்துவம் இன்று இல்லாமல் போயுள்ளது. சுயாதீனத்துவம் பாதுகாக்கப்பட்டுள்ளதா? முன்னர் அரசியலமைப்புச் சபையினால் உயர் பதவிகள் நியமிக்கப்படும். ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே இன்று நியமனங்களை வழங்குகின்றார்.

சுயாதீனம் என்கிற ஆணைக்குழுக்கள் அரச அதிகாரிகளின் அதிகாரங்களைப் பறித்தன. தேர்தல் முழுமையான சிரேஸ்ட அரச அதிகாரியே செய்தார். ஆனால் கடந்த காலத்தில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு தேர்தல்கள் மிகவும் தாமதப்படுத்தப்பட்டு வந்தன. அரச அழுத்தம் அதில் கொடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது அது சட்டவிரோதமானது என்றும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள பேராசிரியர் ஹூல் கூறுகின்றார். இந்த இடத்தில் சுயாதீனத்துவம் எங்கே போனது? அரச அதிகாரிகளின் அதிகாரங்கள் முடிந்தவரை பறித்தெடுத்து அரச அல்லாத நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்குக் கொடுப்பதையே கடந்த அரசாங்கம் செய்தது. உண்மையில் ஜனாதிபதி, அமைச்சரவை இந்த 19ஆவது திருத்தம் குறித்து முடிவு செய்ய வேண்டும். நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற திருத்தங்களை இரத்து செய்வதா அல்லது அதன் சார்ந்த தீர்மானங்களை ஜனாதிபதியே எடுக்க வேண்டும்” என்றார்.