பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்காக சென்னைக்கு ராணுவ விமானத்தில் ரூ.300 கோடிக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன.புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
தட்டுப்பாடு காரணமாக வங்கிகள் கேட்கும் தொகையை விடவும், குறைவான தொகையையே ரிசர்வ் வங்கி அனுப்புகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கேட்கும் தொகையை கொடுக்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன. மேலும் வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
பெரும்பாலான ஏ.டி.எம். எந்திரங்கள் மூடிக்கிடக்கின்றன. திறந்து இருக்கும் சில ஏ.டி.எம்.களிலும் விரைவில் பணம் தீர்ந்து விடுகிறது. ஏ.டி.எம்.களில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளே கிடைப்பதால், சில்லரை கிடைக்காமல் அவதிப்படவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
புதிய 500 ரூபாய் நோட்டுகள் முழுஅளவில் புழக்கத்துக்கு வரும் போது நிலைமை சீரடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முதன் முதலாக கடந்த புதன்கிழமை சேலத்தில் புதிய 500 ரூபாய் நோட்டு அறிமுகமானது. சென்னை நகரில் நேற்று முன்தினம் புழக்கத்துக்கு வந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் சில ஏ.டி.எம்.களில் மட்டும் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன.
பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள மத்திய அரசின் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகத்தில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாசிக்கில் இருந்து ராணுவ விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் அங்கிருந்து 2 கன்டெய்னர் லாரிகளில் அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
500 ரூபாய் நோட்டுகளை கொண்ட 120 பெட்டிகள் 2 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டதாகவும், அந்த ரூபாய் நோட்டுகள் 14 டன் எடை இருக்கும் என்றும் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.300 கோடி மதிப்புள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்து இருப்பதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த புதிய 500 ரூபாய் நோட்டுகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. ஓரிரு நாட்களில் அனைத்து வங்கிகளுக்கும் 500 ரூபாய் நோட்டுகள் போய்ச் சேர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு குறையும். வாடிக்கையாளர்களும் தங்கள் கணக்கில் இருந்து போதிய பணம் எடுக்க முடியும்.
இனி வரும் நாட்களில் மேலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றுவதற்கான ‘கெடு’ நேற்று முன்தினம் முடிவடைந்தது. ஆனாலும் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தங்களது வங்கி கணக்கில் டிசம்பர் 30-ந் தேதி வரை பொதுமக்கள் செலுத்தலாம்.
பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் ‘டெபாசிட்’ செய்து வருகின்றனர். இதனால் சில வங்கிகளிலும், பணம் டெபாசிட் செய்யும் எந்திரம் உள்ள ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
வங்கி கணக்கு இல்லாதவர்கள் தங்கள் கைவசம் உள்ள செல்லாத நோட்டுகளை புதிதாக கணக்கு தொடங்கினால் மட்டுமே மாற்ற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் வங்கிகளில் கணக்கு இல்லாத பலர் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கியில் ரூ.2 ஆயிரம் அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.செல்லாத 500 ரூபாய் நோட்டுகளை அரசு ஆஸ்பத்திரி, பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மத்திய, மாநில அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம், செல்போன்களுக்கு பிரீபெய்டு கட்டணம், குடிநீர் வரி, மின்சார கட்டணம், மருந்தகங்கள், பஸ், ரெயில், விமான டிக்கெட், சமையல் கியாஸ் சிலிண்டர், புராதன இடங்களுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுக்கு அடுத்த மாதம் 15-ந் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
ஆனாலும், அரசு பஸ்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், செல்போன் பிரீபெய்டு கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான சேவை கட்டணங்களுக்கு பழைய 500 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு சில இடங்களில் மறுத்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
10-ந் தேதியில் இருந்து வங்கி ஊழியர்களின் வேலைப்பளுவும் அதிகரித்தது. அவர்களுக்கு கடந்த 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மட்டுமே இடையில் விடுமுறை கிடைத்தது. இந்த நிலையில் இன்று 4-வது சனிக்கிழமை என்பதால், இன்றும், நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை. எனவே இந்த 2 நாட்களும் வங்கிகளில் எந்த அலுவல்களும் நடைபெறாது. அடுத்து திங்கட்கிழமை தான் வங்கிகளில் பணப்பரிமாற்றம் நடைபெறும்.
ஆனாலும் இ-சேவை வசதி உள்ள ஏ.டி.எம். மையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை எந்திரங்களில் ‘டெபாசிட்’ செய்யலாம். ஒருவர் அதிகபட்சமாக ரூ.49 ஆயிரம் வரை ‘டெபாசிட்’ செய்ய முடியும்.