விவசாயிகள் தற்கொலையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

312 0

201611260846000550_mk-stalin-interview-government-should-stop-farmers-suicide_secvpfடெல்டா மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். விவசாயிகள் தற்கொலையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின், நேற்று டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட 10 விவசாயிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தி.மு.க. சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

இதேபோல், நாகை மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஜெயபால் வீட்டிற்கு சென்ற மு.க.ஸ்டாலின் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினரிடம் ரூ.1 லட்சம் நிதியுதவியும் வழங்கினார். பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் விவசாயப் பெருங்குடி மக்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்வது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. அப்படி இறந்திருக்கக்கூடிய விவசாயிகளின் குடும்பங்களை அரசின் சார்பில் யாரும் சந்தித்து உதவிகளை செய்யாமலும், ஆறுதல் தெரிவிக்காமலும் இருப்பது வேதனைக்குரியது. ஆகவே, தி.மு.க. சார்பில், தலைவர் கருணாநிதியின் ஆணையை ஏற்று, இறந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, அந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இப்படி இறந்து போயிருக்கக்கூடிய அந்த விவசாயிகள், உடல் நலிவுற்றதால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, அந்தந்த மாவட்ட உயர் அதிகாரிகள் தெரிவிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையை அந்த அதிகாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய விவசாய நிலங்களை எல்லாம் பார்வையிட வருகை தந்த மத்திய குழுவினரை, அரசு அதிகாரிகள் சந்தித்து உரிய கோரிக்கையை முன்வைக்கவில்லை என்பதோடு, விவசாயிகள் அந்த குழுவினரிடம் தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளையே சொல்ல முடியாமல் போயிருக்கிறது. அதுமட்டுமல்ல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் இந்த அரசு உரிய முயற்சிகளை எடுக்கவில்லை.

அதனால் தான் தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி சில தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் வழங்கிட வேண்டும். அவர்கள் வங்கிகளில் பெற்றிருக்கக்கூடிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும்.

குறிப்பாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி, தீர்மான நகலை நானே நேரடியாக கொண்டு சென்று, முதல்-அமைச்சரின் முழு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். ஆனால், அதன் மீது எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை என்பது உள்ளபடியே வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

எனவே, இனியாவது இந்த அரசு விழித்துக்கொண்டு, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இறந்த விவசாயிகள் எல்லாம் சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்களே?

பதில்:- அரசு அதிகாரிகள் இன்றைய ஆட்சியின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இப்படி செய்து கொண்டுள்ளனர். இது இறந்த விவசாயிகளின் இறப்பையே கொச்சைப்படுத்துவதாக உள்ளது. ஆகவே, இனியாவது அதையெல்லாம் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி:- ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினை எதிர்த்து பாராளுமன்றத்தை முடக்க வேண்டும் என்று சிலர் சொல்வது குறித்து தி.மு.க. என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது?.

பதில்:- ஏற்கனவே எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூடி, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சில போராட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.