பொதுத் தேர்தல் பணிகளுக்காக ஆயிரத்து 459 அரச பேருந்துகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நாடு தழுவியுள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு தரப்பினர்களது போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு 192 பேருந்துகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன என அந்த சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் பணிகளுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் முழுமைப் பெற்றுள்ளன என்றும் தூர பிரதேசங்களில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு வாக்காளர்கள் செல்வதற்கு 800 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இடம்பெற்றதன் பின்னர் வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் மேலதிகமாக, 61 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என்றும் அரச போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக தெரிவித்தார்.