ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் இலங்கை வந்த போது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துக்கு முன்னால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரசன்ச, வீரகுமார திஸாநாயக்க மற்றும் ஜயந்த சமரவீர உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் காவற்துறையினரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள 7வது சந்தேகநபருக்கான அழைப்பாணை வழங்க அவரது வீட்டுக்கு சென்றிருந்த போதும், அவர் இங்கு இருக்கவில்லை என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் அவருக்கான அழைப்பாணையை கையளிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அத்துடன் இந்த வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.
இதேவேளை போலி வெளிநாட்டு கடவுச் சீட்டு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷீ வீரவன்சின் வழக்கும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.