இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து கலாநிதி தீபிகா உடுகம திடீரென பதவி விகியமைக்கான காரணம் என்ன என மனித உரிமைகள் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தனது பதவி விலகல் கடிதத்தை நேற்றுக் கூடிய அரசமைப்பு கவுன்ஸிலில் அவர் கையளித்தார். இதனை இலங்கை நாடாளுமன்ற ஊடகப் பிரிவு நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்தியில் உறுதி செய்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர்தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளார் என அரசமைப்பு கவுன்ஸில் கூறியுள்ளது. இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறந்த தரத்தைப் பேணுவதில் தீபிகா உடுகம வகித்த பங்கை அரசமைப்பு கவுன்ஸில் பாராட்டியுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக சட்டபீடத் துறைத் தலைவராக இருந்த கலாநிதி தீபிகா உடுகம, இலங்கையின் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் அதிகாரத்திலுள்ள ராஜபக்ஷக்களின் கடும் அழுத்தங்களையடுத்தே அவர் பதவி விலகியுள்ளார் என்று மனித உரிமைகள் ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்