ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே தோட்டத்தில் முளைத்த ராட்சத காளான்களை பார்த்து மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கோசனம் பொத்தபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 54). விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் இயற்கை முறையில் வாழை, காய்கறி, நிலக்கடலை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து உள்ளார். நேற்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்துக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு முளைத்து இருந்த ராட்சத காளான்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். ஒவ்வொரு காளான்களும் தலா 1¾ கிலோவுக்கும் மேல் இருந்தன. அந்த பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்துள்ளது. இதில் அந்த காளான்கள் முளைத்துள்ளன.
இதுகுறித்து இளங்கோ கூறுகையில், ‘நம்பியூர் அருகே கடந்த சில நாட்களாக விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் என்னுடைய தோட்டத்தில் காளான்கள் முளைத்து உள்ளன. நான் முதல்முறையாக இவ்வளவு பெரிய அளவிலான ராட்சத காளான்களை பார்க்கிறேன். இதை பார்த்த எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் இந்த காளான்கள் உண்பதற்கு ஏற்றவை அல்ல என்றும், சிலர் உண்பதற்கு ஏற்றது என்றும் தெரிவித்தனர்.
உடனே நான் இந்த காளான்களை கோபியில் உள்ள வேளாண் அலுவலகத்துக்கு எடுத்து சென்று கொடுத்தேன். அவர்கள் இதை ஆய்வு செய்து உண்பதற்கு ஏற்றவையா? இல்லையா? என கூறுவதாக தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த அளவுக்கு காளான்கள் எவ்வாறு பெரிதாக வளர்ந்தது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று வேளாண் அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்,’ என்றார். ராட்சத காளான்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.