யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு விடும் என மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் க. மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்றுக் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
;யாழ். தேர்தல் மாவட்டத்தில் பொதுத் தேர்தல் ஏற்பாடுகள்அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும்.
இம்முறை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 508 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக, அதற்கு உரிய ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கான அறிவுறுத்தல்களை சுகாதாரப் பரிசோதகர்கள் வழங்குவார்கள். அவற்றைப் பின் பற்றி அவர்கள் வாக்களிக்க முடியும். வாக்களிப்பு தினமான புதன்கிழமை காலை 07 மணி முதல் மாலை 05 மணி வரையில் வாக்களிக்க முடியும்.
எனவே வாக்காளர்கள் தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நேரத்துக்கு சென்ற வாக்களிக்கவும். சுகாதார நடைமுறைளை கடைப்பிடித்து அங்குள்ள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி வாக்குகளை அளிக்க முடியும். வாக்களிப்பு அன்றைய தினம் முடிவடைந்த பின்னர் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு பாதுகாப்பான முறையில் எடுத்து வரப்படும். வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கு பெட்டிகள் பொறுப்பேற்கப்பட்டு , அன்றைய தினம் இரவு பாதுகாக்கப்பட்டு மறுநாள் 06ஆம் திகதி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
முன்னதாக தபால்மூலவாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றின் முடிவுகள் காலை 08 மணிக்கு முதல் அறிவிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் ஏனைய வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு முதல் வாக்கெண்ணும் பணிகள் முடிவடையும் என எதிர் பார்க்கிறோம் என்றார்.