ஸ்ரீலங்காவில் கொரோனாவுக்கு மத்தியில் வேகமாகப் பரவும் டெங்கு

260 0

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளமை மக்களை பீதியடையச் செய்துள்ளது.

கடந்த ஜனவரி தொடக்கம் ஜூலை வரையான ஏழு மாத காலத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் ஒன்பது மாகாணங்களில் 23, 885 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேநேரம், இந்த வருடத்தில் கடந்த ஏழு மாதங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 3,380 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பிற்கு அடுத்ததாக மட்டக்களப்பில் 2,262 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்டத்தில் 2,260 பேரும் கண்டியில் 2,181 பேரும் கம்பஹாவில் 2,029 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு அந்த பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண தெரிவித்துள்ளார்.