ஸ்ரீலங்காவில் வெளிநாட்டவர்களுக்காக ஓகஸ்ட் முதல் வாரத்தில் விமான நிலையத்தை திறப்பதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டபோதும் தற்போது ஸ்ரீலங்காவின் விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு இன்னும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை
விமான நிலையங்களை எப்போது திறப்பது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்றினை தொடர்ந்து நாட்டின் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் மத்தளை சர்வதேச விமான நிலையத்தையும் மீண்டும் திறக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னதாக திட்டமிட்டிருந்தது.
மேலும் வெளிநாட்டில் உள்ளவர்களை அழைத்துவரும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 8 ஆம் திகதி தொடங்கும் என்றும் அதன்படி ஒருநாளும் ஒருவிமானம் செயற்படும் என்றும் சுமார் 700 இலங்கையர்கள் நாளொன்றுக்கு ஸ்ரீலங்கா திரும்புவார்கள் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 40,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஸ்ரீலங்கா திரும்பக் காத்திருக்கிறார்கள் என்பதோடு தற்போது வரை சுமார் 12,000 பேர் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.