ரணிலிடம் சஜித் விசேட கோரிக்கை

233 0

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து, மக்கள் பிரதிநிதிகளை வெளியேற்றுவதைத் தாமதப்படுத்துமாறு, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவால், ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தரப்பின் ஊடாகவே, இவ்வாறான ​கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளதெனவும் அதற்கு, ரணில் விக்கிரமசிங்க, சாதகமான பதிலொன்றை அளித்துள்ளாரென்னும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு, கௌரவமளிக்கும் வகையிலேயே, கட்சியிலிருந்து உறுப்பினர்களை வெளியேற்றுவதைத் தாமதப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளாரென அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் அடங்கலாக, 150 பேர், கட்சி செயற்குழுவின் தீர்மானத்துக்கு அமைய, வெளியேற்றப்பட்டனர்.

உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் இன்னும் 200 பேரை, கட்சியிலிருந்து விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஐ.தே.க அறிவித்துள்ளது. இந்நிலையிலேயே சஜித் பிரேமதாஸவால் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சஜித் பிரேமதாஸ, லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசீம், கயந்த கருணாதிலக்க ஆகியோர் தொடர்பில், ஐ.தே.கவின் செயற்குழுவினால், தீர்மானமொன்று இவ்வாரம் எட்டப்படவிருந்தது. எனினும், சஜித் பிரேமதாஸவின் கோரிக்கையை அடுத்து, செயற்குழுவின் கூட்டமும் பிற்போடப்பட்டுள்ளதென அறியமுடிகின்றது.