சிறிலங்கா பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

356 0

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

அதன்படி பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் செல்லுதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், விளம்பர பலகைகளைக் காண்பித்தல், சுவரொட்டிகளைக் காண்பித்தல், தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்திற்கும் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தடை விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று நள்ளிரவுக்குப் பின் ஆரம்பமாகும் அமைதிக் காலத்தில், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென அந்த ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, பிரசாரங்கள் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம், அதன் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில்,  தங்காலை – கால்ரன் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பிரசாரக் கூட்டம், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை மருதானை – டீன்ஸ் வீதியில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் அதன் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று மாலை கொழும்பு – புதுக்கடை பகுதியில் இடம்பெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் இறுதி பிரசாரக் கூட்டம். அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், புதுக்கடை ஜும்மா மஸ்ஜித் வீதிப் பகுதியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.