ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர்களை இத்தாலிக்கு அனுப்பி வைக்க ஊவா மாகாண முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான குழுநிலை விவாதம் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அனுர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள வீதி நிர்மாண ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து இலஞ்சம் பெறுவதற்காகவே ஊவா மாகாண முதலமைச்சரினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனுர தெரிவித்துள்ளார்.
மேலும்,இத்தாலி,தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள சில கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ளவே இவர்கள் திட்டமிட்டிருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்திற்கு செயலாளர் மற்றும் உதவியாளர் ஒருவரை முதலமைச்சர் நியமித்திருந்தார் என்றும் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர் என்றும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முதல்வருக்கு எதிராக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா என்ன நடவடிக்கை முன்னெடுக்க உள்ளார் எனவும் அனுர இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.
”எங்களுக்கு தெரியும் முதலமைச்சர் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று ஆனால் எங்களது கேள்விக்கு தயவு செய்து பதில் அளியுங்கள்” என அனுர மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.