துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், ஜெகதளா கிராமத்தைச் சேர்ந்த திரு. சசிக்குமார் என்பவரின் மகன் செல்வன் பிரவீன் என்பவர் விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; குன்னூர் வட்டம், அதிகரட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. அமாவாசை என்பவரின் மகள் செல்வி மங்கம்மா என்பவர் துணியினை உலர்த்த முற்படும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த திருமதி யசோதா என்பவரின் கணவர் திரு. பாபு என்பவர் பட்டறையில் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திரு. சீனுவாசன் என்பவரின் மகன் சிறுவன் சிபிராஜ் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்து மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் அறிக்கையில் கூறியுள்ளார்.