சட்டவிரோத துப்பாக்கிப் பாவனை அதிகரிப்பு-பாதுகாப்புத் தரப்பே பொறுப்பு

324 0

prathibha-mahanama-whoநாட்டில் சட்டவிரோத துப்பாக்கி பாவனையால் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு பாதுகாப்பு தரப்பு பொறுப்பு கூற வேண்டும் என்று முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி தொடர்பில் அனுபவம் உள்ளவர்களாலேயே நாட்டில் துப்பாக்கி பயன்பாட்டால் குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக, முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

இராணுவம் மற்றும் பொலிஸ் சேவையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பான தரவுகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான விரிவான விசாரணையின் மூலம், துப்பாக்கி மூலமான குற்றச் செயல்களை அதிகளவில் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்குள் துப்பாக்கி மூலமான குற்றச் செயல்கள் நாட்டில் பல பிரதேசங்களில் பதிவாகியிருந்ததுடன், நேற்றைய தினம் மினுவாங்கொடையிலும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் பதிவாகியிருந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றிருந்ததுடன், ஒருவர் உயிரிழந்தார்.

இதற்கு முன்னர், கண்டி – அங்குபுர பகுதியின் பெபில பள்ளிக்கு அருகில், காரில் வந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்திருந்தார்.

இது தவிர, கடந்த 15ம் திகதி குருநாகல் மாஸ்பொத பிரதேசத்தில் பொலிஸ் தொலைபேசி கண்காணிப்பு வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

வாத்துவ புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஒருவரின் சடலம் கடந்த ஒக்டொபர் 31ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

ஒக்டோபர் மாதம் 23ம் திகதி மட்டக்குளிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்திருந்தனர்.

இதை அண்மித்த ஒரு நாளில் நிட்டம்புவ பிரதேசத்திலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததுடன், வர்த்தகர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவங்களை பாதாள உலக குழுக்கிளுக்கு இடையில் உள்ள பிரச்சினையாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளை பாதுகாப்பு தரப்பினர் பொறுப்பேற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், அதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கவில்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துள்ள துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மூலம் அவதானிக்க முடிந்துள்ளது.

சட்டவிரோத துப்பாக்கிகளை பொறுப்பேற்பதற்கான பொறுப்பு பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாக கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா கூறியுள்ளார்.