‘தம்பிக்கும் பாப்பாவுக்கும் இளைஞர்களின் ஆதரவு இல்லை’

328 0

மலையக இளைஞர்கள் தங்களது பக்கம் இருப்பதாக பிரசாரம் செய்துவரும் தம்பிக்கும் (ஜீவன் தொண்டமான்), பாப்பாவுக்கும் (அனுஷா சந்திரசேகரன்) இளைஞர் ஆதரவு இல்லை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கே தற்போது இளைஞர்கள் பாரியளவில் ஆதரவை தெரிவித்து வருவதாகவும் கூறினார்.

கொழும்பு வாழ் மலையக இளைஞர்களுடனான சந்திப்பு ஒன்றை தமிழ் முற்போக்குக் கூட்டணி நேற்று(31) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ​தொடர்ந்து உரையாற்றிய அவர், “நாட்டில் மீண்டும் குடும்ப ஆட்சியை உருவாக்கப் போகிறோமா என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ வெற்றிப்பெறக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் தேர்தலுக்கு இறுதி வாரத்துக்கு முன்பு அதில் மாற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார்.

தேர்தலுக்கு ஒருவாரம் இருக்கின்ற நிலையில் இதுபோலவே மலையகத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்கள் பாரியளவில் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இளைஞர்கள் எங்களது பக்கம் இருக்கிறார்கள் என தம்பியும், பாப்பாவும் பிரசாரம் செய்துவந்தார்கள். ஆனால் இளைஞர்கள் எங்களது பக்கமே இருக்கிறார்கள்.” எனவும் தெரிவித்தார்.