சஜித் பிரேமதாச தூய்மையான அரசியல் செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மஹிந்த ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க இணைந்து தங்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கு எதிராக போலி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மத்திய கலாச்சார நிதியத்தில் இருந்து எடுக்கப்பட்ட பணம் நியாயமான முறையிலேயே செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியம் தொடர்பான செயற்பாடுகளில் 11 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கமைய அதிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் இவர்களின் அனுமதியுடனே எடுக்கமுடியும். இந்நிலையில் இந்த பணம் தொடர்பில் அப்போதைய நிதி அமைச்சர் உள்ளிட்ட 8 பேர் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் பிரதமர் செயலாளர் ஆகியோர் மாத்திரமே கைச்சாத்திடாது இருந்துள்ளனர். இங்குதான் சதிதிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பணம் வீடுகள் அமைப்பதற்கோ வேறு எதற்கோ செலவிடப்படவில்லை. விகாரைகளின் திருத்தத்திற்கும், புத்தர்சிலைகள் அமைப்பதற்கும் மற்றும் தேவாலங்களின் திருத்த வேலைப்பாடுகளுக்குமே பயன்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் தெளிவாக சொல்கின்றோம்.
சஜித் பிரேமதாச என்பவர் ஏனையவர்களை போன்றவரல்ல, அவர் தூய்மையான அரசியல் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகின்றார். தற்போது உள்ள சில அரசியல்வாதிகள் தங்களது தவறை மறைப்பதற்காக இன்னுமொருவருக்க எதிராக வேனும் என்றே திட்டமிட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
தவறு இடம்பெற்றிருந்தால் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். ராஜபக்ஷர்களின் காலத்தில் எந்த விகாரை மற்றும் மதஸ்தலங்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
இதுதான் மஹிந்த ராஜபக்ஷ – ரணில் விக்கிரமசிங்கவின் சேறுபூசல் செயற்பாடுகள். இதற்கு ஏமாற்றமடையாது எதிர்வரும் 5 ஆம் திகதி இந்த செயற்திறன் அற்ற அரசாங்கத்திற்கு தக்க பாடத்தை புகட்டுங்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.