நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு

260 0

அவன்காட் நிறுவனத் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான அவன்காட் நிறுவன வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றில் இடம்பெறும் விசாரணைகளை இடைநிறுத்தவே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் ரக்னலங்காவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு இலஞ்ச வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த பரிவர்த்தனையின் போது 35.5 மில்லியன் ரூபாய், இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.

இதனை அடுத்து கடந்த ஆண்டு ஒக்டோபரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிசங்க சேனாதிபதி தொடர்ந்து ஜனவரி மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவன் கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் ஏழு பேருக்கு எதிராக அவன் கார்ட் ஆயுத கடத்தல் வழக்கில் சட்டமா அதிபர் கடந்த செப்டம்பர் மாதம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார்.

குறிப்பாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டமா அதிபர் சார்பாக 7,573 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கை சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்னாண்டோ ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னர் கோரிக்கை ஒன்றினை விடுத்தனர்.

இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவில் இரு ஆணையாளர்களின் எழுத்து மூலமான ஒப்புதல் இல்லாமல் இது தாக்கல் செய்யப்பட்டது எனக் கூறப்பட்டது.

இருப்பினும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன இந்த ஆரம்ப ஆட்சேபனையை நிராகரித்து வழக்கை தொடர உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இலஞ்ச ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்தினால் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சட்டத்தின் 17, 19, 21 மற்றும் 25 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் 47 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.