புலம்பெயர் உறவுகளிடம் எமக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைக்க பொய்யான தகவல்களைச் சிலர் பரப்பவுள்ளனர் என நம்பத்தகுந்த நபர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் பொதுத் தேர்தலில் எம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வெற்றியை ஏதோ ஒரு விதத்தில் தடுப்பதற்கு அரச முகவர்களும், எமக்குப் போட்டியாக உள்ள ஏனைய தரப்புகளும் சேர்ந்து பொய்யான தகவல்களைத் தேர்தலுக்கு அண்மித்த திகதிகளில் வெளியிடவுள்ளனர். பொய்களைக் கூறி மக்களைக் குழப்பி எமது வெற்றியைக் குறைப்பதற்கான சதி முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர் ; எனத் தெரிவித்தார்.