கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரத்தை தொடர்ந்து தமிழகத்திலும் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானம் மூலம் கடத்திய 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் பெரும் அரசியல் புயலை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் விவகாரத்தில், தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவான என்.ஐ.ஏ.வின் பார்வை தமிழகம் பக்கமும் திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. தங்கம் கடத்தலில் கைதாகி உள்ள ஸ்வப்னா சுரேஷ், கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் வழியாகவும் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் கருதுகின்றனர்.
எனவே தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி விமான நிலையங்களில் கடந்த ஆண்டில் பெரிய அளவில் நடந்த தங்கம் கடத்தல் சம்பவங்கள் பற்றியும், அந்த கடத்தல்களில் கைதானவர்களின் பின்னணி பற்றியும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்வதாக கூறப்படுகிறது. பெரிய அளவில் தங்கம் கடத்தல்களை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கண்டுபிடித்து அதிகமான கடத்தல் தங்கங்களை பறிமுதல் செய்தனர். அந்த வழக்குகள் ஆய்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை, திருச்சி விமான நிலையங்களில் பெரிய அளவில் நடந்த தங்கம் கடத்தல் வழக்குகளில் கைதானவர்கள், தலைமறைவானவர் கள் பற்றி முழு விவரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேகரித்து வருவதாக தெரிகிறது. அந்த கடத்தல் சம்பவங்களில் கைதானவர்கள் யார்?. அவர் களை ஜாமீனில் எடுத்தவர்கள் யார்?. அவர்கள் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தனர்? என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரியில் ஒரு கடத்தல் கும்பலை பிடித்தனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின்பேரில் சென்னை சூளைமேட்டில் ஒரு வீட்டில் நடத்திய சோதனையில் 20.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அந்த தங்க கட்டிகள் துபாயில் இருந்து விமானத்திலும், இலங்கையில் இருந்து படகிலும் சென்னைக்கு கடத்தி வரப்பட்டன.
அதேபோல் கடந்த ஆண்டு சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த 2 வெளிநாட்டு பெண்களிடம் இருந்து ஹாங்காங்கில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த 20 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.
கடந்த ஆண்டு அதே ஜனவரி மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் 2 கொரிய நாட்டு இளம்பெண்களிடம் இருந்து 24 கிலோ கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சென்னை விமான நிலையத்தில் 9.8 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
ஒரே மாதத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினரும், சுங்கத்துறையினரும் 4 வழக்குகளில் 74.4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து உள்ளனர். இந்த 4 வழக்குகள் உள்பட பெரிய அளவில் தங்கம் பிடிபட்ட வழக்குகளில் கைதானவர்கள், அவர்கள் யாரோடு தொடர்புடையவர்கள்?. அவர்கள் யாருக்காக அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்தனர்? என்பன போன்ற விவரங்கள் விசாரிக்கப்படுகிறது.
அதேபோல் திருச்சி விமான நிலையத்திலும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை மிகப்பெரிய அளவில் கடத்தல் தங்கம் பிடிபட்டது. மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் சுமார் 15 நாட்கள் திருச்சி விமான நிலையத்திலேயே முகாமிட்டு பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதைதொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் கூண்டோடு இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே கேரளா தங்க கடத்தல் விவகாரம் குறித்து விசாரணை நடத்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் வந்து விசாரணை நடத்த உள்ளனர். தமிழக தங்கம் கடத்தல் சம்பவங்களுக்கும், கேரளாவில் தங்கம் கடத்தியதாக கைதான ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்த இருப்பதாக தெரிகிறது. இதனால் தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள பரபரப்பு போல் தமிழகத்திலும் பரபரப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
இவைகளோடு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில் 64 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர். அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
தங்கம் கடத்தல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்.ஐ.ஏ.வின் அதிரடி நடவடிக்கையால் தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் பீதி அடைந்துள்ளனர்.