115 கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கான முடிவை வரவேற்கும் ரணில்

227 0

ஐக்கிய மக்கள் சக்தியின் நடத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

115 உறுப்பினர்களின் கட்சி உறுப்பினர்களை நிறுத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று செவ்வாய்க்கிழமை எடுத்த முடிவை வரவேற்று அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

2020 பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த 54 பேரும் மேலும் 61 உள்ளூராட்சி உறுப்பினர்களும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக நேற்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெளியேற்றப்பட்ட கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்கனவே கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பெயர்கள் இன்று வெளியிடப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற பொது கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியே சிறுபான்மையினரையும் பாதுகாத்து வருவதாகவும், தொடர்ந்து அவ்வாறே செயற்படும் என்றும் உறுதியளித்தார்.

அத்தோடு முஸ்லீம் மற்றும் தமிழ் சமூகத்தினர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை அடையாளத்தைக் கொண்ட நாட்டின் ஒரே அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் நாட்டின் 7 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி இழக்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்க வருவாய் 50% குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே இந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்த அரசாங்கத்திற்கு பலம் இல்லை என்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு மட்டுமே அந்த வலிமை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.