அரசியல் கைதிகள் எவரும் அரசியல் தீர்மானப் பிரகாரம் விடுவிக்கப்படவில்லை- குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு

270 0

சிறையில் இருந்து வெளியேறிய அரசியல் கைதிகள் எவரும் அரசியல் தீர்மானப் பிரகாரம் விடுவிக்கப்படவில்லை என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு  குறிப்பிட்டுள்ளது.

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

இதற்காக கட்சி ரீதியாக மட்டுமன்றி வேட்பாளர்கள் தமது விருப்பு வாக்குகளுக்காகவும் தத்தமது வெறுப்புணர்வுகளை தள்ளி வைத்துவிட்டு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட தமிழர் நலன்கள்  குறித்து அதிகளவு பேசுகின்றனர்.

எனவே நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் எவரும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் இருந்து விலகிச்செல்ல முடியாது.

மேலும் தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை வென்றெடுப்பதற்காகவே பல்வேறு இழப்புக்களை எதிர்கொண்டு போராடி வருகின்ற ஒரு சமூகமாக தமிழினம் அடையாளப்பட்டு நிற்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.