மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறை தண்டனை

247 0

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்.  இவர் மீது பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பாக நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் நடத்தினர். அதில், பெட்டி பெட்டியாக நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 போலீசார் கணக்கீட்டு வந்த நிலையில், அதன் மொத்த மதிப்பு 27.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பின் படி 188 கோடி 71 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 12 ஆயிரம் நகைகள்,  567 ஆடம்பர கைப்பைகள், 234 சன்கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரம் போன்றவை அடங்கும்.

இந்நிலையில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என்று அந்நாட்டு உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மலேசிய வளர்ச்சி நிதியத்தின் நிறுவனங்களில் ஒன்றின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

1 எம்டிபி (1MDB) எனப்படும் மலேசிய மேம்பாட்டு நிதியத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றாக இருந்த எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் நிதியில் இருந்து சுமார் 42 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக ரசாக் மீது குற்றசாட்டு பதியப்பட்டது.   சுமார் 3 ஆண்டு காலம் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் இன்று காலை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் நஜீப் ரசாக் மீதான பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

மலேசியாவில் உயர்பதவியில் இருந்த நபருக்கு சிறை தண்டனை  விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.