இனப்படுகொலைக்கு சாட்சியம் இல்லை என கூறுவது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிநிரலை பலப்படுத்துவதாக உள்ளது. யுத்த குற்றத்துக்கும் இனப்படுகொலைக்கும் கிட்டத்தட்ட ஒரே சாட்சியங்களே தான். ஆனால் யுத்த குற்றம் என்பதை தாண்டி இனப்படுகொலை என்பதை நிரூபிக்க தேவையான விடயமாக நோக்கத்தை உறுதிப்படுத்தல் உள்ளது.
இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிக்கும் நோக்கத்துடன் செயற்படுவதனை கடந்த கால இனவன்முறை வரலாற்றை எடுத்து கூறினாலே சாட்சிகள் போதுமானதாகும். சாட்சியங்கள் இல்லை என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ழுமையான நேர்காணலாவது,
தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் கடந்த 10 ஆண்டுகள் தோல்விகளில் பெற்ற அனுபவமாக நீங்கள் எதை கருதுகிறீர்கள்?
எங்களை பொறுத்தமட்டில் 2010ஆம் ஆண்டு 2015ஆம் ஆண்டு தோல்விகளால் நாங்கள் துவண்டுவிடாது தொடர்ந்து போராடியதாலேயே 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் பெரும் வெற்றியை பெற்று எம்மை நிரூபிக்க முடிந்தது. இதிலிருந்து நாங்க கற்ற அனுபவம் போராடினால் வெற்றி என்பது இலகுவானது நிச்சயமானது என்பதாகும். அதனை மூச்சாக கொண்டே தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்திலும் நாங்கள் உறுதியாக போராடி கொண்டுள்ளோம்.
தமிழ் தேசிய மக்கள் முன்ணனியின் கொள்கை இறுக்கம் பலவீனமாக காணப்படுவதாக பரவலாக கருத்துரைக்கப்படுகிறது. உங்கள் பார்வை எவ்வாறாக உள்ளது?
நிச்சயமாக கொள்கை இறுக்கம் என்பது எங்கள் பலவீனமல்ல. அதையே நாம் பலமாக கருதுகிறோம். நாங்கள் கொள்கையில் உறுதியாய் இருந்ததன் விளைவு தான் ஒரு குறுகிய காலப்பகுதியில் எமது அமைப்பு தொடங்கி எட்டு ஆண்டுகளிலேயே 2018ஆம் ஆண்டு வடக்கு – கிழக்கின் இரண்டாவது பெரிய கட்சி என்றதொரு ஸ்தானத்தை அடைவதற்கு உறுதுணையாக இருந்தது எனலாம். தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதில் நாங்கள் கொள்கை இறுக்கத்துடன் பயணிப்போம்.
நீங்கள் சட்டத்தரணி என்ற நிலையிலேயே ஓர் கேள்வி. அண்மையில் ஓர் நேர்காணலில் எம்.ஏ.சுமந்திரன் இனப்படுகொலைக்கு சாட்சியமில்லை அதனை முன்னிறுத்துவதால் அது தோற்கடிக்கப்படும். அதனாலேயே யுத்தகுற்றத்தை முன்னிலைப்படுத்துவதாக கூறியுள்ளார். அது தொடர்பில் உங்கள் கருத்து?
என்னை பொறுத்த மட்டில் இனப்படுகொலைக்கு சாட்சியம் இல்லை என கூறுவது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிநிரலை பலப்படுத்துவதாக உள்ளது. யுத்த குற்றத்துக்கும் இனப்படுகொலைக்கும் கிட்டத்தட்ட ஒரே சாட்சியங்களே தான். ஆனால் யுத்த குற்றம் என்பதை தாண்டி இனப்படுகொலை என்பதை நிரூபிக்க தேவையான விடயமாக நோக்கத்தை உறுதிப்படுத்தல் உள்ளது. அதாவது இது ஒரு இனத்தை முழுமையாக அல்லது பகுதியளவில் அழிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயற்பட்டார்கள் என்பது உறுதிசெய்யப்பட வேண்டும். இதனடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்தை நிரூபிக்க வேண்டிய தேவைப்பாடு நம்மிடம் காணப்படுகிறது. வேறு எதுவுமில்லை.
யுத்த குற்றமென்பது ஜெனீவா சாசனத்தில் கூறப்பட்டுள்ள போருக்கான நியமங்களை மீறி தமிழ் மக்கள் மீது கொடூரமான கொலைகள் நடாத்தப்பட்டது என்பதுவே யுத்த குற்றமாகிறது. ஆகவே இதை நிரூபிக்கலாம் என சுமந்திரன் கூறுவாராயின் யுத்த குற்றம் சர்வதேச நியமனங்களின்படி நிரூபணமாகிவிடும்.இவ்யுத்த குற்றத்தை நிரூபிப்பற்கு சாட்சியமுள்ளது எனக்கூயிருக்கிறார். ஆகவே அதில் பிரச்சினை இல்லை. இப்ப நாங்கள் இது யுத்த குற்றம் இல்லை அதையும் தாண்டி ஒரு இனப்படுகொலை என்று சொல்கின்றோமாயின், இப்பொழுது நாங்கள் யுத்த குற்றத்துக்கும் மேலதிகமாக நிரூபிக்க வேண்டிய விடயம் என்னவாக இருக்குமென்றால் இலங்கை அரசாங்கத்தின் நோக்கம், இந்த இனத்தை அழிக்க வேண்டும் அல்லது இந்த இனத்தினுடைய ஒரு பகுதியை அழிக்க வேண்டும் என்பதாகவே அமையப்பெற்றிருந்தது என்பதேயாகும். அதற்கு நாங்கள் வரலாற்றுரீதியாக சிங்கள பேரினவாதத்தினுடைய நடவடிக்கைகளை முன்வைப்போம் என்றாலே போதுமானதாக இருக்கிறது.
குறிப்பாக சிங்கள மொழி சட்டம், காலத்துக்கு காலம் தமிழினத்துக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பப்பட்ட இனக்கலவரங்கள் என்பன தமிழினத்தை அழிப்பதற்கான நோக்கம் வரலாற்றில் சிங்கள பௌத்த அரசாங்கங்களிற்கு இருந்தது என்பதை முன்வைக்க போதுமானது. யுத்தத்துக்கு பின்னராக கடந்த 11 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு தமிழ் பிரதேசங்களில் நிகழ்த்தப்படும் குடியேற்றங்கள், தொல்பொருளியல் ஆக்கிரமிப்புக்கள் என்பன இனப்படுகொலை என்பதற்கு அப்பால் இனஅழிப்பாக நாம் அடையாளப்படுத்தலாம். அதற்கான சாட்சியங்கள் எம்மிடம் குவிந்துள்ளன. அது மாத்திரமின்றி எமது புலம்பெயர் உறவுகள் சர்வதேச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகளை உள்ளடக்கி இரு தீர்ப்பாயங்களை உருவாக்கி இருந்தது. ஓன்று டப்லின் தீர்ப்பாயம் மற்றையது பிறைமன் தீர்ப்பாயம் ஆகும். இரண்டிலுமே இலங்கையில் இனஅழிப்பு நிகழ்ந்ததாகவே சர்வதேச நீதிபதிகளால் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அங்கு சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டிருந்தது. ஆதலால் இதற்கு சாட்சியமில்லை எனக்கூறுவது என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துநிலையாகும்.
இளைஞர்கள் அமைச்சுப்பதவியை பெற கோருவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கருத்துரைத்துள்ளனர். இளையோருடன் அதிகம் தொடர்புடைய இளைய வேட்பாளர் என்ற ரீதியில் இளையோரின் எதிர்பார்ப்பு பற்றிய உங்கள் பார்வை?
இளைஞர்கள், யுவதிகள் அமைச்சுப்பதவியை பெற வேண்டுமென்று எம்மிடம் கோருவதில்லை. நிச்சயமாக எங்களோடு அணிசேர்ந்து நிற்கும் இளைஞர்கள், யுவதிகள் எல்லோரும் உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலைப்பாட்டுடனேயே எம்முடன் இணைகிறார்கள். கூட்டமைப்பை விட இளைஞர்கள் பலம் அதிகம் உள்ள கட்சியாக இன்று நாம் தான் இருக்கின்றோம். அவர்களுடைய நோக்கம் நிச்சயமாக உரிமைகள் வென்றெடுக்க வேண்டும் என்பது தான். அமைச்சுப்பதவி இல்லை. ஆனால் இன்னொரு விடயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் யுவதிகளுடைய எதிர்பார்ப்பு தங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதும் தான். அப்போது நாங்கள் அவர்களிடம் வேலைவாய்ப்பென்றால் நீங்கள் அரச வேலை வாய்ப்பை எதிர்பார்க்கிறீர்களா? நாங்கள் அமைச்சுப்பதவியை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என்று கேட்கும்; போது அவர்கள் இல்லை என்று தான் சொல்கிறார்கள். அவர்கள் அதுதான் வேண்டுமென்று கேட்கவில்லை. அவர்கள் தங்களுக்கு வேலை வேண்டும் என்று தான் கேட்கிறார்கள். ஆகவே இளைஞர்கள் அமைச்சுப்பதவியை கோருகிறார்கள் என்று சொல்வது அப்பட்டமான பொய். அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இங்கு யாரும் ஒன்று இரண்டு இளைஞர்கள் அவ்வாறு கேட்டிருக்க கூடும். ஆனால் அதைப்பற்றி எனக்கு தெரியாது. ஆனால் பெரும்பாலான இளைஞர்கள் அமைச்சுப்பதவியை கேட்கவில்லை வேலை வாய்ப்பை கேட்டுள்ளார்கள். அதுவும் கட்டாய அரச வேலைவாய்ப்பு என்று கூட அவர்கள் கேட்பதில்லை. தங்களுடைய தொழில் பாதுகாப்பான வேலையையே கேட்கிறார்கள். தனியார் துறையினூடக கூட அவர்கள் வழங்கப்படுவதை ஏற்று கொள்கிறார்கள். பெரும் தொழிற்சாலைகளை உருவாக்கி அதற்கு செல்ல தயாரா என கேட்டாலும், ஆம் என்று தான் சொல்கிறார்கள். அவர்கள் அதையும் செய்ய தயாராகவே இருக்கிறார்கள்.
இங்கு கொழும்பிலே தென்னிலங்கையிலே இருப்பது போன்ற பல்வேறு தொழிற்சாலைகள், பல்வேறு தனியார் நிறுவனங்கள் உருவாக்கப்படும் போது இங்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது தாராளமாக கிடைக்க பெறும். அதனையே இளைஞர் யுவதிகள் எம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். தங்கள் சுகபோக வாழ்விற்காக கூட்டமைப்பினர் இளைஞர்கள் மீது பழிபோடுவது வேடிக்கையாக உள்ளது.
பிரச்சாரக்களங்களில் மக்களிடமுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி தொடர்பான பார்வை எவ்வாறாக உள்ளதாக அவதானிக்கிறீர்கள்?
தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனியை மிக நேர்மையான அமைப்பாக, கொள்கையிலே உறுதியான மிகப்பற்றுமிக்க அமைப்பாக மக்கள் பார்க்கிறார்கள் அமைப்பாக பார்க்கிறார்கள். விலைபோகாதவர்கள் எனவும், பல இளைஞர்களை கொண்ட துடிப்பான அமைப்பாகவும் தமிழ் மக்கள் எங்களை பார்ப்பது பிரச்சாரங்களின் போது அவதானிக்கமுடிகிறது.
மக்கள் முண்ணனியை நீங்கள் மாற்றாக அடையாளப்படுத்துவதில் உள்ள பிரதான விடயமாக எதை கருதுகிறீர்கள்?
பிரதான விடயம், பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் விட்டுக்கொடுப்புக்களை செய்ய தயார் இல்லா அமைப்பு. தங்களுடைய உறுப்பினர்களின் சுய தேவைகளுக்காக தமிழ் மக்களின் அபிலாசைகளை கைவிடும் ஓர் அமைப்பாக செயற்படாது. அதுவே எங்களை மற்றைய கட்சிகளிலிருந்து வேறுபடுத்தும் பிரதான அம்சமாகிறது. இரண்டவது நாங்கள் நேர்மையான அரசியலை செய்ய விரும்புகிறோம். மக்களது நலன் சார்ந்த அமைப்பாக நாங்கள் செயற்பட விரும்புகிறோம். நாங்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கிறோம். அதாவது உரிமையை பற்றி பேசினா மக்களின் வாழவாதார அபிவிருத்தியை பற்றி கதைக்க முடியாது என்ற போலியான நம்பிக்கை தமிழ் மக்களிடம் இருக்கிறது. அது தவறான எண்ணப்பாடு. நாங்கள் இரண்டையும் சமாந்தரமாக செயற்படுத்த மிக காத்திரமாக செயற்படும் அமைப்பாக காணப்படுவோம். என பதிலளித்தார்.
நேர்கண்டவர் :- ஊடகவியலாளர் சி.நிதர்ஷன்.