சென்னை மாநகராட்சிக்கு ஒரே நாளில் 7 கோடி ரூபாய் வரி வசூல்

319 0

201611250859493513_rs-7-crore-tax-collections-on-same-day-to-corporation-of_secvpfபழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நேற்று ஒரே நாளில் ரூ.7 கோடி வசூல் கிடைத்துள்ளது.கருப்பு பணம் ஒழிப்பதற்கு பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் மக்கள் பணத்தட்டுப்பாட்டால் மிகவும் பாதிப்படைந்தனர். இதனை கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி கடந்த 12-ந் தேதி சிறப்பு அறிவிப்பை வெளியிட்டது.

இதன் மூலம் மாநகராட்சிக்கு மக்கள் செலுத்த வேண்டிய வரியை பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி நேரடியாக ரொக்கமாக செலுத்தலாம் என்றது. பொதுமக்கள் வரியை செலுத்துவதற்கு ஏதுவாக மண்டல அலுவலகங்கள் மற்றும் பொதுவரி வசூல் மையங்கள் உள்பட பல இடங்களில் 446 சிறப்பு கவுண்ட்டர்கள் தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றதால் வரி செலுத்தும் கால நேரம் முதலில் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்பு வரி செலுத்த 24-ந் தேதி(நேற்று) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வரி செலுத்த கடைசி நாள் என்பதால் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

வரி செலுத்த வந்த பொதுமக்களில் அதிகம் பேர் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வரி செலுத்தினர். நேற்று மட்டும் 7 கோடியே 2 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கடந்த 13-ந் தேதி முதல் நேற்று மாலை 6 மணி வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.70 கோடியே 52 லட்சம் வரி வசூல் ஆகியுள்ளது.