2 நாட்களில் கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக திறக்கப்படும்: ஆந்திர அதிகாரி

319 0

201611241502242261_andhra-official-information-addition-krishna-water-opening_secvpfகண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 நாட்களில் கூடுதல் தண்ணீர் திறப்பதாக ஆந்திர பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்து இருப்பதாக தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரியில் சேமித்து வைக்கப்படும் நீர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.

இந்த நிலையில் பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் குறைந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டுத் திட்டத்தின்படி வெகுவாக குறைந்து வருவதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடந்த மாதம் கடிதம் எழுதினர்.

இதையடுத்து கடந்த 9-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 17-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. வெறும் 63 கனஅடி மட்டும் வந்து சேர்ந்தது.

இதுபடிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் காலை தண்ணீர் வரத்து முழுவதுமாக நின்றது. இதனால் கிருஷ்ணா நதி கால்வாய் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நதி கால்வாயில் உள்ள சுமார் 900 சிறு மதகுகளை திறந்து விடுவதால் கிருஷ்ணா நதி கால்வாயில் வரும் தண்ணீர் வயல்களுக்கு சென்று விடுகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து நின்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தண்ணீரை திருடும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் நெல்லூர் மாவட்ட கலெக்டர் முத்தியால ராஜூவுக்கு கடந்த 20-ந் தேதி கடிதம் எழுதினர். கலெக்டரின் உத்தவுப்படி ஆந்திர பொதுப் பணித்துறை ஊழியர்கள் விவசாயிகள் திறந்து விட்ட மதகுகளை ஒவ்வொன்றாக மூடி வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லூர் அருகே உள்ள ராப்பூர் பகுதியில் கிருஷ்ணா நதி கால்வாய் ஓரமாக உள்ள மதகுகளை மூட சென்ற பொதுப் பணித்துறை ஊழியர்கள் மீது விவசாயிகள் தாக்குதல் நடத்தினர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கிருஷ்ணா நீர் முழுவதும் பூண்டி ஏரிக்கு செல்ல அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இதனால் இன்னும் 2 நாட்களில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பதாக ஆந்திர பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்து இருப்பதாக தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரியில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 17.25 அடியாக பதிவான 77 மில்லியன் கனஅடி தண் ணீர் இருப்பு உள்ளது.பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.