கொரோனாவை கட்டுப்படுத்த வளங்களை சரியாக பயன்படுத்த வேண்டும் – சம்பிக்க

246 0

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கைகளை அரசாங்கம் தவிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு படையினரால் இயக்கப்படும் கந்தகாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று நோயாளிகள் பதிவாகியுள்ளனர். போருக்கு மருத்துவர்களையும் நோய்களை கட்டுப்படுத்த ஆயுதமேந்திய படையினரையும் நிறுத்த முடியாது என சுட்டிக்காட்டிய சம்பிக்க ரணவக்க தவறான செயல்களின் விளைவாக, இன்று நாம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதாக கூறினார்.

மேலும் சுகாதார வழிகாட்டுதல்கள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே செயற்படுத்தப்படுகின்றன என்றும், அந்த சட்டங்கள் எதுவும் அரசாங்கத்திற்கு அமுல்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ள நிலையில் பரிசோதகர்களுக்கு உடனடியாக அதிகாரங்களை வழங்குவதற்கான வர்த்தமானியை வெளியிடுமாறும் சம்பிக்க ரணவக்க கேட்டுக்கொண்டார்.