ஐக்கிய தேசியக் கட்சியினர் தங்களின் தோல்வியை இப்பொழுதே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்!

271 0

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 90 சதவீதமானோர் வெளியேறியுள்ள நிலையில் அங்கு வெறுமனே பிளவு ஏற்பட்டுள்ளது என்று கூறுவதில் எந்த உடன்பாடும் எனக்கு இல்லை.

பொதுவாக ஐம்பது சதவிகிதமோ அல்லது 70 சதவீதமோ வேறு கட்சிக்கு சென்றிருந்தால் அதனை பிளவாக ஏற்றுக் கொள்ளலாம்.

எனினும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ள நிலையில், அதனை வெறும் பிளவு என்று கூற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறிய மாறுபட்ட கருத்துகள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

இந்தநிலையில், ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடுவதற்கு சஜித் பிரேமதாசதான் முக்கிய காரணம் என்று கூறி வந்த ரவி கருணாநாயக்க, அண்மைக்காலமாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் காரணம் என்று கூறியுள்ள நிலையில் அவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா என்று செய்தியாளர் இதன்போது கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன், கொழும்பு மாவட்டத்தில் ரவி கருணாநாயக்கவின் தெரிவு என்பது கேள்விக் குறியாகிவிட்டது.

அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் இருப்பும் தற்போது கேள்விக் குறியாகிவிட்டது. கட்சித் தலைமையகத்தின் பெயர் பலகையும், யானைச் சின்னமும் மட்டும்தான் ரணில் விக்கிரமசிங்கவின் கையில் எஞ்சி இருக்கின்றது. இந்த இரண்டை மாத்திரம் வைத்துக்கொண்டு நாங்கள் பிளவுபட்டு விட்டோம் என்று ஐக்கிய தேசிய கட்சியினர் கூறுவது வானத்தைப் பார்த்துக் கொண்டு தமக்குத் தாமே உமிழ்வது போன்ற செயலாகும்.

அதேபோன்று, ரவி கருணாநாயக்கவின் கருத்துமாற்றம் என்பது அவர் உண்மையை உணர்ந்து கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுகின்றது.

தங்களின் தோல்வியை ஐக்கிய தேசியக் கட்சியினர் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதற்கு இந்த விடயங்களும் சான்று பகர்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரம்மாண்ட வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஏற்பட்ட கலக்கம்தான் அவரின் மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ரவி கருணாநாயக்க யாரை வேண்டுமானாலும் குறை கூறிக் கொண்டு செல்லலாம். ஆனால் மக்கள் நிச்சயமாக யாருக்கு என்ன பாடத்தைப் புகட்ட வேண்டுமோ அதனை முறைப்படி இந்த தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள்.

ரவி கருணாநாயக்க எதுவேண்டுமானாலும் கூறலாம் ஆனால் அவரை ஏற்றுக் கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஒரு போதும் தயாராக இல்லை. ஐக்கிய தேசிய கட்சியின் பிளவுக்கு அவர்தான் முக்கிய காரணமாக இருக்கிறார் என்றால் ஐக்கிய மக்கள் சக்தியின் பிளவுக்கும் அவர் காரணமாகி விடுவார் என்ற அடிப்படையில் அவரை ஏற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பே இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் பிரதிநிதியாக ரவி கருணாநாயக்கவை முதலில் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா.

என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதன்பின்னர் நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா, இல்லையா என்பது குறித்து கவனம் செலுத்துவோம் என்று கலாநிதி வி.ஜனகன் செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.