ஆக்கிரமிப்பு காஷ்மீர் இல்லாமல் வரைபடம் – பள்ளி பாட புத்தகங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை

278 0

பள்ளி பாட புத்தகங்களில் காஷ்மீர் (ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி) இல்லாமல் அச்சிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியதால் பாகிஸ்தான் பாடநூல் வாரியம் தடை விதித்தது.

இந்தியாவின் காஷ்மீரை சொந்தம் கொண்டாடி வரும் பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு சில பள்ளி பாடப்புத்தகங்களில் அந்த நாட்டின் வரைபடம் கா ஷ்மீர் (ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி) இல்லாமல் அச்சிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து பஞ்சாப் பாடத்திட்டம் மற்றும் பாடநூல் வாரியம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட புத்தகங்களை ஆய்வு செய்தது.

இதில் இழிவுபடுத்தும் மற்றும் ஆட்சேபகரமான உள்ளடக்கங்கள் இருப்பதாக கூறி 100-க்கும் மேற்பட்ட பாட புத்தகங்களுக்கு பஞ்சாப் பாடத்திட்டம் மற்றும் பாடநூல் வாரியம் தடை விதித்தது.

இதுகுறித்து அந்த வாரியத்தின் இயக்குனர் ராய் மன்சூர் நசீர் கூறுகையில் “ சில புத்தகங்களில் பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா மற்றும் தேசிய கவிஞர் அல்லாமா முகமது இக்பால் ஆகியோர் பிறந்த சரியான தேதியை கூட அச்சிடவில்லை. மேலும் சில புத்தகங்களில் பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து காஷ்மீரை காணவில்லை. இது தவிர அவதூறான மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு உள்ளடக்கங்களும் சில புத்தகங்களில் உள்ளன. இதன்காரணமாக 100-க்கும் மேற்பட்ட பாட புத்தகங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அந்தப் புத்தகங்களை சந்தையில் இருந்து பறிமுதல் செய்வோம்’’. இவ்வாறு அவர் கூறினார்.