வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை- டிரம்ப் நிர்வாகம் அதிரடி

314 0

ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் பல்கலைக்கழகங்களில் புதிதாக சேரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க நாடானது வேலைவாய்ப்பு மட்டுமின்றி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விகளை பயில சிறந்த இடமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா வெளிநாட்டு மாணவர்களுக்காக எப்1, எம்1 போன்ற கல்வி விசாக்களை வழங்கி வருகிறது.
சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் இந்த விசாக்களைப் பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக தென் கொரியா, சவுதி அரேபியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிக அளவிலான மாணவர்கள் ஆண்டு தோறும் அமெரிக்கா செல்கின்றனர்.
தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதால் அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்களை ஆன்லைன் மூலம் எடுத்து வருகின்றன. இது ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அமெரிக்காவில் முழுவதும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க குடியுரிமைத் துறை கடந்த மாதம் அறிவித்தது.
இது வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமின்றி, அந்த நாட்டின் பல்கலைக்கழகங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விஷயத்தில் அரசின் முடிவை கடுமையாக எதிர்த்த ஹார்வர்டு உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
50-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்தது. இதனால் அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களும், அந்த நாட்டின் பல்கலைக்கழகங்களும் நிம்மதி அடைந்தன.
இந்நிலையில், அமெரிக்காவில் முழுவதும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் பல்கலைக்கழகங்களில் புதிதாக கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அந்நாட்டு குடியுரிமைத் துறை அனுப்பியுள்ள அறிக்கையில், “மார்ச் 9-ம் தேதிக்கு பின்னர் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படாமல் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பினால் அவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது. அவர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மார்ச் 9-ம் தேதிக்கு முன்னர் கல்வி விசாக்களைப் பெற்ற வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பும் புதிய மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.