75 வருடங்களாக பாதுகாத்துவரும் உரிமைகளை உயிரோடு வைத்திருக்க தம்மை ஆதரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுமந்திரனை எவருமே கணக்கெடுக்கத் தேவையில்லையென கட்சியின் தலைவரே குறிப்பிடும்போது, தாம் அவரைப்பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பு முற்றும் முழுதாகப் பறிபோவதற்கான நிலைமை இருக்கின்றது. அப்படியான சூழ்நிலையில்தான் நாம் தேர்தலை ஏதிர்நோக்கியுள்ளோம்.
இந்த தேர்தலில் தமிழ் மக்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸைத் தவிர வேறு எந்த அமைப்பிற்கு வாக்களித்தாலும் தமிழர் தாயக நிலப்பரப்பு சிங்கள, பௌத்த மக்களுக்குதான் சொந்தம் என காட்டப்படும்.
அத்துடன், எமது உரிமைகளை நாங்களாகவே கைவிடும் நிலைக்கு வந்துவிடுவோம். எனவே இதனை எமது தார்மீகக் கடமையாக விளங்கிக்கொண்டு சைக்கிள் சின்னத்திற்கு வாக்களித்து 75 வருடங்களாக பாதுகாத்துவரும் உரிமைகளை உயிரோடு வைத்திருக்க வேண்டும்.
இதேவேளை, நான் ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனோடும் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனோடும் விவாதிக்கத் தயார். இதுதான் கட்சியின் நிலைப்பாடு.
இந்நிலையில், நான் சுமந்தினோடு விவாதித்துவிட்டுச் சென்றால் கூட்டமைப்பின் தலைவர் சுகமாக சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து என்று தப்பிவிடுவார். இரா.சம்பந்தன் விக்னேஸ்வரன் ஆகியோர் விவாதிக்கத் தயார் என்றால் மணிக்கணக்கில் நான் அவர்களை அம்பலப்படுத்த தயாராக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.