பொய்யுரைப்பவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால் மீண்டும் பொய்யுரைக்கவே முற்படுவார்கள்- பழனி

341 0

பொய்யுரைப்பவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால் அவர்கள் மீண்டும், மீண்டும் பொய்யுரைக்கவே முற்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த கூட்டத்தில் பழனி திகாம்பரம் மேலும் கூறியுள்ளதாவது, “மலையகம்  குறித்து  நாமே கனவு கண்டோம்.  தற்போது அதனை நனவாக்கியுள்ளோம்.

மலையகத்தின் எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைப்பதற்கான திட்டங்களையும் நாம் வைத்துள்ளோம்.  ஆனால்  ஒருசிலர், தாத்தா கண்ட கனவு, அப்பா கண்ட கனவு என்று  கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றார்.

ஆனால் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு பொய்யுரைப்பவர்களை நாடாளுடமன்றம் அனுப்பினால் அவர்கள் மீண்டும், மீண்டும் பொய்யுரைக்கவே முற்படுவார்கள்.

எனவே,மக்களுக்கு சேவைகளை செய்துள்ள நாம் அவற்றை சுட்டிக்காட்டி உரிமையுடனேயே வாக்கு கேட்கின்றோம்.

மேலும் சலுகைகளுக்காக பேரம் பேசமாட்டோம். மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கவே பேரம் பேசுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0Shares