கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் நாட்டில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தால் உறுதியாக கூற முடியாது எனத் தெரிவித்தார்.
சுகாதார அமைப்புக்குள் கடுமையான பிரச்சினைகள் இருப்பதை சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, இரண்டாவது அலையின் பேச்சுக்களுக்கு மத்தியில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய ஒரு அரசாங்கமாக தங்களை கட்டிக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது என சஜித் பிரேமதாச அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் தொற்றின் ஆபத்து நாட்டிற்குள் பெருமளவில் இருப்பதாகவும் ஜனவரி 24 மற்றும் பெப்ரவரி 5 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போதைய சூழ்நிலையை அரசாங்கம் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.