இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மிகவும் அவசியமென கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் வலியுறுத்தியுள்ளார்
கறுப்பு ஜூலை தினத்தை முன்னிட்டு புதிய ஜனநாய கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 1983 ஜூலை 23 ஆம் திகதிக்கும் 29ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன.
அதாவது குறித்த காலப்பகுதியில் பெரும்பாலான காடையர் கும்பல்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இனக்கலவரத்தில் ஈடுபட்டன.
குறித்த கலவரத்தில் 3000 பேர் வரை கொல்லப்பட்டதுடன் 1,50,000க்கும் அதிகமானவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.
இத்தகைய நிகழ்வுகளினால் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளில் வாழவேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
இனப்படுகொலை மற்றும் உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட துயரங்களை இன்னமும் அனுபவித்துக்கொண்டிருப்பவர்களின் நிலைமைகளை நாங்கள் உணர்கின்றோம். அதேநேரம் எங்களை பிளவுபடுத்தக்கூடிய வெறுப்பின் வலிமை குறித்து நாங்கள் அலட்சியமாக இருக்க கூடாது.
இலங்கையின் உள்நாட்டுப்போரின் இருண்ட நாட்கள் நல்லிணக்கம், நீதி மற்றும் உண்மை ஆகியவற்வை ஏற்படுத்துவதிலும் இன்னமும் துயரத்தை அனுபவிப்பவர்களினது காயங்களை ஆற்றுவதிலும், நாங்கள் எங்கு வாழ்ந்தாலும் எங்களுக்கு கூட்டு பொறுப்புள்ளதை நினைவுபடுத்தி நிற்கின்றன.
எனவே இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியமென நாமும் வலியுறுத்துகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.